அனைவருக்கும் வணக்கம்,
ஜோதிட ரீதியாக ஒரு ஜாதகத்தில் 9ம் மற்றும் 12ம் அதிபதிகள் மட்டுமே அயல் நாடு செல்லும் வாய்ப்பை நிர்ணயிக்கின்றனர்.
ஒரு ஜாதகத்தில் 9ம் மற்றும் 12ம் அதிபதிகள் எந்த இடத்தில் இணைந்திருந்தாலும், அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது அயல் நாடு சென்று வருவார் என்று கூறலாம்.
பொதுவாக அயல் நாட்டு ஆவல் மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது . முற்காலங்களில் அயல் நாடு சென்று வருவது ஒரு தோஷமாக கருதப்பட்டது . ஆனால் தற்காலத்தில் அயல் நாடு செல்வது யோகம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
கேந்திரத்தில் செவ்வாய் , சனி , சந்திரன் ஆகிய மூவரும் இணைந்து பொது சுபரான குரு பகவானின் பார்வையில் உள்ள போது அந்த ஜாதகருக்கு அகண்ட பாதாள யோகம் உள்ளது என ஜோதிட ரீதியாக கருதப்படுகிறது .
இந்த யோகம் உள்ளவர்கள் தங்களுடைய இல்லம் , சுற்றத்தினர் எல்லாவற்றையும் விடுத்து தூர தேசத்திற்கு சென்று கஷ்டப்பட்டு உழைப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சனி பகவான் ஒரு ஜாதகத்தில் மகரத்தில் அமர்ந்து குரு பகவான் அதே இடத்தில் இணைந்து நீச்சம் பெறும் போது அந்த ஜாதகர் பணிக்காக அயல் நாடு செல்கிறார். இதற்கு காரணம் என்னவென்றால்,
சனி பகவான் மகரத்தில் ஆட்சியாகி நீச்சமான குருவை நீச்ச பங்கமாக மாற்றுகிறார்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணி வந்த 10ம் அதிபதி 12ம் இடத்தில் நின்று அந்த ராசி ஜல ராசியானால்,அந்த ஜாதகர் பணிக்காக அயல்நாடு செல்கிறார் .
ஜலராசி என்பது கடகம், விருச்சிகம், மீனம் ஆகும்.
காலபுருஷதத்துவத்தின்படி, நம் முன்னோர்கள் 12 ராசிகளை, நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவை நெருப்பு ராசி, நீர் ராசி, காற்று ராசி, ஜல ராசி ஆகும், ஜல ராசி பிரிவுகளில் உள்ள மூன்று ராசிகளில் 10ம் அதிபதி சென்று அமர்ந்து அது 12ம் வீடாக மாறும் போது அந்த ஜாதகருக்கு அயல் நாட்டு யோகம் கிடைக்கப் பெறுகிறது.
4ம் அதிபதியும், 10ம் அதிபதியும் இணைந்து 12ம் இடத்தில் நின்று 9ம் அதிபதி அல்லது பொது சுபர் குரு பகவானின் பார்வை,லக்ன சுபர் பார்வை பெறும் போது அந்த ஜாதகர் அயல் நாடு செல்லும் வாய்ப்பை பெறுகிறார்.
4ம் அதிபதியும்,10ம் அதிபதியும் இணைந்தாலே அந்த ஜாதகருக்கு தொழிலில் எந்த வித பிரச்சினையும் இருப்பதில்லை.
பொதுவாக 12ம் இடம் வெளிநாட்டு யோகத்தை குறிக்கக் கூடியது. இந்த இடம் நல்ல சுபர் சேர்க்கை பெறும் போது, ஜாதகருக்கு அயல் நாட்டில் நல்ல பணியை உண்டாக்கி அந்த பணியில் ஒரு சிறந்த மேன்மையை பெற்று தந்து, நல்ல தன லாபத்தை பெற்று தருகிறார்.
மேற்குறிப்பிட்ட இந்த அமைப்புகள், ராசிகள் ஏறிய நட்சத்திரங்களை பொருத்தும் மற்றும் அம்சத்தில் கிரகம் நீச்சம் பெற்றிருந்தாலும், மாறுதலுக்கு உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம், நன்றி, வணக்கம்.🙏
அன்புடன்,
லெட்சுமி நாராயணன்.
காணொளி வடிவில் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.👇
Commentaires