அனைவருக்கும் வணக்கம்,
இந்த ஆண்டு குருப் பெயர்ச்சியானது 20/11/2020 அன்று திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நடைபெற உள்ளது. ஆனால், 5 தினங்களுக்கு முன்பாகவே வாக்கிய பஞ்சாங்கப் படி குரு பகவான் பெயர்ச்சி ஆகின்றார்.
கால புருஷ தத்துவத்திற்கு 9ம் பாவமான தனுசு ராசியிலிருந்து 10 ம் பாவமான மகர ராசியில் சென்று குரு பகவான் நீச்சமாகிறார். பொதுவாக குருபகவான் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு சுற்றி வர ஆகும் காலம் 12 ஆண்டுகளாகும். இதில் மகர ராசியின் சிறப்பு என்னவென்றால், குரு பகவான் நீசமடையும் வீடு.
பொதுவாக ஒரு கிரகம் நீச்சம் பெறுகிறது என்றால் அந்த கிரகத்தின் காரத்துவம் என்று சொல்லக்கூடிய அந்த கிரகத்தால் கிடைக்கக் கூடிய பலன்கள் மனிதர்களுக்கு குறைவாக கிடைக்கும் என்பது ஜோதிட விதி. ஆனால், அனுபவத்தில் உச்சத்தை விட நீச்சமான கிரகங்கள் தான் அந்த ஜாதகரை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு சென்று வைத்துள்ளது.
இந்த குருப்பெயர்ச்சிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்று நாம் பார்த்தோமேயானால், குரு பகவான் சஞ்சாரம் செய்யக்கூடிய மகர ராசியில் இருக்கக்கூடிய மூன்று நட்சத்திரங்களுமே குரு பகவானுக்கு நட்பு நட்சத்திரங்கள். அதாவது, உத்திராட நட்சத்திரம் சூரியனுக்கும், திருவோண நட்சத்திரம் சந்திரனுக்கும், அவிட்ட நட்சத்திரம் செவ்வாய்க்கும் உரியதாகும்.
எப்போதுமே குருப்பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் குரு பகவானால் பெரிய தீங்கு நேர்வதில்லை. ஆனால், இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசி மற்றும் தனுசு லக்ன அன்பர்களுக்கு 2ம் இடத்தில் குரு வருவதால், பொதுவாக குருவுக்கு 2,5,7,9,11ம் ஸ்தானங்கள் அருமையான ஸ்தானங்கள். இந்த ஸ்தானங்களில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுதோ அல்லது ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் போதோ அவர் அபரிமிதமான பலன்களை நல்குவார்.
குரு பகவானுக்கு என்றே சில காரத்துவங்கள் உள்ளன. அவை கருணை,அதிக தனம், பொதுப்பணம், சாந்தம் மற்றும் பொறுமை, தயாள குணம், மதிப்பு மரியாதை,மற்றும் பதவி மேற்கண்டுள்ள அனைத்து குண நலங்களுமே 2,5,7,9,11ம் இடங்களில் உள்ள குரு பகவானால் அந்த ஜாதகருக்கு கிடைக்கும். இப்பொழுது தனுசு ராசி, தனுசு லக்னத்தை எடுத்துக்கொள்ளும் போது இதுவரை ஜனன குருவாக இருந்து குருவால் பண கஷ்டம் மற்றும் தொழிலில் முதலீடு செய்து விரயமாவது ,பணியில் ஊதிய உயர்வு இன்மை, குடும்பத்தில் பிரச்சினைகள் ஆகியவற்றை அனுபவித்தனர்.
இதற்கு காரணம் ஜனன குரு 5,7,9ம் இடங்களை காண்பார். இதில் 2ம் இடம் சுபத்துவ தொடர்பு இல்லை என்பதால் நிறைய கருத்து வேறுபாடு, தொழில் நஷ்டம் ஆகியவை ஏற்பட்டன. தனுசு ராசி அன்பர்கள் எற்கனவே ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் உள்ளனர். 2ம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் தனம் நிறைய விரயமாகும். இதற்கெல்லாம் ஒரு விடிவு காலமாக இந்த குருப் பெயர்ச்சி அமையும். 2ம் இடத்திற்கு வரும் குருவால் நிறைய நன்மைகள் உள்ளன.
தன ஸ்தானத்திற்கு குரு பகவான் வருவதால் மகர ராசியில் இருக்கக்கூடிய மூன்று நட்சத்திரங்களுமே குருவின் நட்பு நட்சத்திரங்கள் என்பதால்,இனி வரக்கூடிய ஒரு வருடமும் தனுசு ராசி அல்லது லக்ன அன்பர்களுக்கு பணப் புழக்கம் அதிகமாக இருக்கக்கூடிய கால கட்டமாகும்.தனம் அபரிமிதமாக சேரும். ஆனால், 2ம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவானால் பண விரயங்களை தவிர்க்க இயலாது. இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், இல்லத்தில் உள்ள எந்த ஜாதகருக்கு நல்ல திசை நடக்கிறதோ அவர்கள் பெயரில் பணத்தை சேர்த்து வைப்பது நல்லது.
பொதுவாக, ஏழரை சனி காலகட்டத்தில் உழைப்பிற்கேற்ற உயர்வு யாருக்கும் கிடைக்காது. இதற்கு தீர்வு நிச்சயமாக குருப்பெயர்ச்சிக்கு பிறகு உண்டு. ஆனால், பேச்சில் கவனம் தேவை. 2ம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் இந்த பாதிப்பு நிச்சயமாக இருக்கும்.
கடன் இல்லாதவர்கள் இந்த காலக் கட்டத்தில் மிகவும் குறைவு. அடுத்த 12 மாதங்களுக்கு தனுசு ராசி அல்லது தனுசு லக்ன அன்பர்களுக்கு கடனில் பெரும் பகுதியை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், 2ம் பாவத்தில் உள்ள குரு பகவான் 6ம் பாவத்தை காண்கிறார். இதில் 6ம் பாவம் கடன், எதிரி, நோய் இந்த மூன்றையும் குறிக்கக்கூடியது. 2ம் பாவத்திலிருந்து 6ம் பாவத்தை காண்பதால் 2ம் பாவத்தொடர்பை பெற்று அந்த தனத்தை அதிகரித்து கடன் என்னும் சுமையை தீர்த்து வைப்பார்.
அடுத்ததாக, குருபகவான் 2ம் பாவத்தில் இருந்து 10ம் ஸ்தானத்தை காண்பதால் பதவி உயர்வு என்பது நிச்சயம் கிட்டும். இதில் 10ம் வீடு பதவி உயர்வு அல்லது அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் குறிக்கக்கூடியது.
அடுத்ததாக, 2ம் பாவத்திலிருந்து 6,8,10 ஆகிய இடங்களை குருபகவான் காண்பதால் அதாவது, இந்த இடங்கள் பணபர ஸ்தானங்கள் என்று ஜோதிடத்தில் கூறுவார்கள். அகம் சார்ந்த மற்றும் புறம் சார்ந்த என இரண்டு வகையான காரகங்கள் உள்ளன. அதில் இந்த இடங்கள் புறம் சார்ந்த காரகங்களை குறிப்பதால் பொருளாதாரத்தில் பெரிய அளவிற்கு பிரச்சனைகள் இருக்காது.
2ம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுவதால் கடந்த காலத்தில் நிலவி வந்த குடும்ப ஒற்றுமையின்மை, சங்கடங்கள் எல்லாமே வருகிற 12 மாதங்களில் சரியாகும். ஆனாலும் 2ல் சனி இருப்பதால் அந்த பிரச்சினை என்பது முழுவதுமாக முடியாது.
கணவன் –மனைவி ஒற்றுமையை பொறுத்தவரை சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 6ம் பாவத்தையும் 8ம் பாவத்தையும் பார்த்து 7 ம் பாவத்துக்கு ஒரு சுபகர்த்தாரி யோகம் என்று சொல்லக்கூடிய சுப பார்வையை செலுத்தி 7ம் பாவத்தை சுபமாக வைத்திருப்பதால் கணவன் –மனைவிக்கிடையே பெரிய அளவுக்கு இனிமேல் கருத்து வேறுபாடுகள் இருக்காது.
இந்த குருப்பெயர்ச்சியை பொறுத்தவரை தனுசு ராசி மற்றும் தனுசு லக்ன அன்பர்களுக்கு முழுக்க முழுக்க நன்மைகள் மட்டுமே நிகழ்ந்தாலும், சனி பகவான் 2ல் இருக்கிற வரை வார்த்தை, பணம், குடும்பம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவை.
மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம், நன்றி, வணக்கம்.🙏
அன்புடன்,
லெட்சுமி நாராயணன்.
Comments